தே.ஜ.கூட்டணியின் தளபதி இ.பி.எஸ். தான்: கூட்டணியில் த.வெ.க இணைய வாய்ப்பு- ராஜேந்திர பாலாஜி
- தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
- கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
புதுக்கோட்டை:
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கூட்டணி உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், அதிமுக- பாஜக கூட்டணி ரெய்டுக்கு பயந்து அமைந்த கூட்டணி என கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து இருந்தார்.
இந்த நிலையில், 'தினத்தந்தி' நாளிதழுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அளித்த பேட்டியில், 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும். தேர்தலில் நாங்கள் அ.தி.மு.க தலைமையின் கீழ் போட்டியிடுகிறோம். முதலமைச்சர் அ.தி.மு.க.வில் இருந்து வருவார்.
மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள். அனைத்தும் தெளிவாகிவிடும் என்று கூறினார்.
அமித்ஷாவின் இந்த பேட்டி தமிழக அரசியல் மட்டுமின்றி அதிமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்டளை தளபதி எடப்பாடி பழனிசாமி தான். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். கூட்டணியில் யாருக்கு எவ்வளவு சீட் என்பதை எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுப்பார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் த.வெ.க இணைவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான நகர்வுகள் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.