தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2026-01-31 08:33 IST   |   Update On 2026-01-31 08:33:00 IST
  • இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.
  • பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பணிபுரியக் கூடிய இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-1 தேர்விலும், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தாள்-2 தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவதற்கு 2025 செப்டம்பர் மாதம் விண்ணப்பம் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு 2025-க்கான தாள் 1, நவம்பர் 15-ந்தேதி 367 மையங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்வினை 92 ஆயிரத்து 412 பேர் தேர்வு எழுதினர். அதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் II, 2025 நவம்பர் 16-ந்தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 3,31,923 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.

பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிப் பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து ஜனவரி 28-ந்தேதி அரசாணை வெளியிட்டது.

அதன்படி பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதம் அல்லது 90 மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம், சீர்மரபினர், மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதம் அல்லது 75 மதிப்பெண்கள், எஸ்சி, எஸ்சி அருந்ததியர், பழங்குடியினர் பிரிவினருக்கு 40 சதவீதம் அல்லது 60 மதிப்பெண்கள் என 150 மதிப்பெண்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏற்கனவே 2025 நவம்பர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி உள்ளவர்களுக்கும் மதிப்பெண் குறைத்து கணக்கிடப்படும் என தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் குறைக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது எனவும், தகுதி பெற்ற தேர்வர்களுக்கு பிப்ரவரி 2 தேதி மாலை முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in- தகுதி சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News