பழனி தைப்பூசத்திருவிழாவில் இன்று திருக்கல்யாணம்- நாளை தேரோட்டம்: 3 நாட்களுக்கு தரிசன கட்டணம் ரத்து
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
- பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை திருக்கல்யாணமும், நாளை தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
பழனி தைப்பூசத்திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாது நள்ளிரவிலும் பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பியபடி வந்தவண்ணம் உள்ளனர்.
இதனால் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் தலையாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் பழனி மலைக்கோவிலில் 2 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பக்தர்கள் வருகை அதிகரிப்பால் மலைக்கோவிலில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. அவ்வாறு காத்திருக்கும் பக்தர்களுக்கு பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், சிற்றுண்டி உள்ளிட்டவை கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக இன்று முதல் 3 நாட்களுக்கு மலைக்கோவிலில் தங்க ரத புறப்பாடு ரத்து செய்யப்பட்ட நிலையில் கட்டண தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் எஸ்.பி. பிரதீப், கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரசன்னா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் சரவணன் தெரிவிக்கையில், பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிக நேரம் காத்திருப்பதால் பக்தர்கள் சோர்வு அடைந்து விடுகின்றனர். இந்த ஆண்டு பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிற்றுண்டிகள், தண்ணீர் பாட்டில்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இடும்பன்குளம், சண்முகாநதி உள்ளிட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அதிகளவில் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் பேருந்து வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொதுமக்கள் சிரமமின்றி வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் காவல்துறையின் மூலம் 3 ஆயிரம் காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைப்பூசத் திருவிழா நாளில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படுவதால் பக்தர்களின் உடைமைகள் திருடுபோவதற்கு வாய்ப்புள்ளது. இதனை கருத்திற்கொண்டு 22 சிறப்பு குற்றக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 600 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
பழனி தைப்பூச திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதியில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி பழனி இடும்பன்குளத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். எனவே பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட தீயணைப்பு அலுவலர் விவேகானந்தன் தலைமையிலான தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக இடும்பன்குளத்தில் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு படையினர் ரோந்து சென்றனர். அதேபோல் மலைக்கோவில், அடிவாரம் என 12 இடங்களில் மீட்பு பணி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 170-க்கும் மேற்பட்ட படையினர் கண்காணித்து வருகின்றனர்.