வழிபாடு

திருமணம் - குழந்தை வரம் தரும் தோரணமலை முருகன்!

Published On 2026-01-31 11:11 IST   |   Update On 2026-01-31 11:11:00 IST
  • மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
  • பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதி உள்ளது.

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் மேற்கே வெள்ளைப் பட்டை தீட்டியது போல் ஒரு அழகிய மலைக்குன்று நம் கண்களுக்கு தென்படும். யானை படுத்திருப்பது போன்று காட்சியளிக்கும் அந்த மலைதான், தோரணமலை. யானைக்கு 'வாரணம்' என்ற பெயர் உண்டு. அந்த வகையில் 'வாரணமலை' என்று அழைக்கப்பட்ட இந்த மலை, காலப்போக்கில் மருவி, 'தோரணமலை' என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

2 நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும். அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி, மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.

 

இந்த 2 நதிகளுக்கு இடையேதான் தோரண மலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணப்படுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.

வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம். இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.

 

சுனை

மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான். அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

அடிவாரத்தில் வல்லப விநாயகர், கன்னிமார் அம்மன், வியாழ பகவான் மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி, சிவபெருமான், சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன. அரச மரத்தடியில் வீற்றிருக்கும் சப்த கன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால் வேண்டுதல் நிறைவேறுகிறது. மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும்.

 

துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பாவம் போக்கும் புண்ணியமலை, யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு ஏழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல. பல நூறு ஆண்டுகளாக மலை உச்சியில் இருப்பதாலோ என்னவோ, இந்த முருகன் மிகச்சிறந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார்.

பல சித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள்.

இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரம், குழந்தை பாக்கியம் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண் டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ள தாகவும் கூறுகிறார்கள். நலம் தரும் தோரணமலை தைப்பூச நாயகனை வணங்கி அருள் பெறலாம்.

Tags:    

Similar News