null
- முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும்.
- லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் மிக முக்கியமான தினங்களில் தைப்பூசத் திருநாள் ஒன்று. தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் நாளை தைப்பூசத் திருநாளாக கொண்டாடுகிறோம்.
தைப்பூச நாளில் முருகப் பெருமானை போற்றி வழிபட்டால் பல மடங்கு நன்மைகள் பெறலாம். இந்த ஆண்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூசத் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தைப்பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
முருகப்பெருமானுக்கு உரிய முக்கிய வேண்டுதல்களில் காவடி எடுப்பதும் ஒன்றாகும். இந்த காவடி எடுக்கும் முறை தோன்றிய தலமாக பழனி உள்ளது. பழனியில் தைப்பூச விழா 10 நாள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அன்றையை தினம் லட்சக்கணக்கான பக்தர்கள், முருகனுக்கு விரதம் இருந்து பச்சை உடை தரித்து பாத யாத்திரையாக பழனிக்கு வருவார்கள்.
தைப்பூச நாளில் அதிகாலையில் எழுந்து, வீட்டை சுத்தம் செய்து நீராடிவிட்டு, திருநீறு அணிந்து விரதத்தை தொடங்கலாம். பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து விளக்கேற்றி வழிபடலாம். கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப் படை, திருப்புகழ் போன்ற முருகப் பெருமானுக்கு உகந்த பாடல்களை பாட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் 'ஓம் சரவணபவ' எனும் ஆறெழுத்து திருமந்திரத்தை உச்சரித்தபடியே இருப்பது நல்லது.
காலை மற்றும் மதியம் இரு வேளைகளிலும் உணவு உண்ணாமல், பால், பழம் மட்டுமே சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு செல்வது சிறப்பு. முருகப்பெருமானை மனதார நினைத்து, அவன் அருள் வேண்டி விரதம் இருக்க வேண்டும். மாலையில் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
தைப்பூச விரதத்தை 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது அன்று ஒரு நாள் மட்டும் என அவரவர் விருப்பத்திற்கேற்பவும், உடல்நிலைக்கு ஏற்பவும் மேற்கொள்ளலாம். சிலர், காவடி எடுத்தும், பால்குடம் சுமந்தும், அலகு குத்தியும், பாத யாத்திரையாக சென்றும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். தீராத நோயால் அவதிபடுபவர்கள், முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி நோய் நீங்கி, உடல் ஆரோக்கியம் பெற்றதும் தைப்பூசத்தன்று காவடி எடுத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கிறார்கள்.
27 நட்சத்திரங்களில், பூசம் நட்சத்திரத்தின் அதிதேவதையாக இருப்பவர், குரு பகவான். எனவே, தைப்பூச நாளில் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு குரு பகவானின் அருளும் சேர்ந்து கிட்டும்.
தைப்பூச நாளில் தொட்டது துலங்கும் என்பார்கள். எனவே அன்றைய தினம், குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், திருமணப் பேச்சுக்கள், புதிய தொழில் ஒப்பந்தம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கும், தீராத பகை மாறும், ஒற்றுமை அதிகரிக்கும், தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.