தமிழ்நாடு செய்திகள்

பயணிகள் கவனிக்க: அடுத்த 2 மாதத்துக்கு இந்த ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயங்கும்

Published On 2026-01-31 04:37 IST   |   Update On 2026-01-31 04:37:00 IST
  • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

சென்னை:

இந்தியாவில் ரெயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ரெயில்வே வாரியம் சார்பில் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பயணிகளின் நலன்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் 3 எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 4-ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, தஞ்சாவூர்-எழும்பூர் இடையிலான உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், கேரளா மாநிலம் கொல்லம்-எழும்பூர் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 3-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

எழும்பூர்-தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில், எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், எழும்பூர்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

எழும்பூர்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News