தமிழ்நாடு செய்திகள்

தே.மு.தி.க.வின் எழுச்சியும்... வீழ்ச்சியும்: பிரேமலதாவின் முடிவு இந்த தேர்தலில் கைகொடுக்குமா?- தொண்டர்கள் எதிர்பார்ப்பு

Published On 2026-01-30 14:56 IST   |   Update On 2026-01-30 14:56:00 IST
  • 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.
  • வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும்.

சென்னை:

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தே.மு.தி.க. தீவிரமாக தயாராகி வருகிறது.

கடந்த 2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்தாண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே களமிறங்கினார்.

இந்த தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.4 சதவீத வாக்குகளை பெற்றது. முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் பின்னர் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் தே.மு.தி.க. சாதித்து காட்டியது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் பாராளுமன்ற தேர்தலில் 10 சதவீதமாக கூடியது.

இப்படி 2 தேர்தல்களில் பெரிய அளவில் வாக்குகளைப் பெற்ற தே.மு.தி.க. 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இந்தத் தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது. தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் அப்போது 7.9 சதவீதமாக இருந்தது. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் அமர்ந்தார்.

இப்படி கட்சியை தொடங்கிய பிறகு தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கவனம் ஈர்த்த தே.மு.தி.க. இதன் பின்னர் நடைபெற்ற எந்த தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை. 2011-ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து அந்த கட்சி தோல்வியையே தழுவி வந்துள்ளது.

2016-ம் ஆண்டு தேர்தலில் அமைக்கப்பட்ட மக்கள் நல கூட்டணி தே.மு.தி.க.வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

அந்த தேர்தலில் விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை களமிறங்கின. 103 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அந்தக் கட்சியின் வாக்கு சதவீதம் 2.4 ஆக குறைந்தது.

இதனைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் நடத்தப்பட்ட கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதன் காரணமாக டி.டி.வி. தினகரனுடன் கூட்டணி அமைத்து தே.மு.தி.க. தேர்தலை சந்தித்தது. அந்த தேர்தலில் மொத்தம் 60 இடங்களில் போட்டியிட்ட தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதம் 0.43 ஆக அடியோடு சரிந்தது.

இப்படி தமிழக தேர்தல் களத்தில் தே.மு.தி.க. எப்படி எழுச்சி பெற்றதோ அதே போன்று வீழ்ச்சியையும் சந்தித்திருக்கிறது.

இது போன்ற சூழலில் தான் வருகிற சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தே.மு.தி.க. தயாராகி வருகிறது.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்தது. மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக அ.தி.மு.க. உறுதி அளித்திருந்த நிலையில் அதனை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அ.தி.மு.க. மீது தே.மு.தி.க. கடும் கோபத்திலேயே உள்ளது.

இது போன்ற சூழலில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தே.மு.தி.க.வுக்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று இன்னும் முடிவெடுக்காத அந்த கட்சி தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

வருகிற சட்டமன்றத் தேர்தல் அந்த கட்சிக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு சட்டமன்றத் தேர்தலில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் தே.மு.தி.க. என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அ.தி.மு.க, தி.மு.க. 2 கட்சிகளிடமும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டும், ஒரு மேல் சபை எம்.பி. பதவியை ஒதுக்கி தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தே.மு.தி.க. பிரதானமாக முன் வைத்திருக்கிறது. இதுவே 2 கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதற்கு தடைக்கல்லாகவே இருந்து வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

தே.மு.தி.க.வுக்கு 10 இடங்கள் வரையில் ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் தே.மு.தி.க.வோ, பா.ம.க.வுக்கு இணையாக தங்களுக்கு 17 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் பல்வேறு சிறிய கட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அவற்றுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் 10 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு தே.மு.தி.க.விடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் அதனை அந்த கட்சி ஏற்றுக்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் 6 தொகுதிகள் வரை ஒதுக்கி தருவதாக தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள தே.மு.தி.க. தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரே நேரத்தில் தே.மு.தி.க. 2 கட்சிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாலேயே தே.மு.தி.க. இன்னும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் பலரும் குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

இதன் காரணமாக வருகிற சட்டமன்றத் தேர்தலில் பிரேமலதா எடுக்கும் முடிவு அந்த கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லுமா? என்கிற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இது தொடர்பான கேள்விகளுக்கெல்லாம் தொடர்ந்து ஒரே வரியிலேயே பிரேமலதா பதில் அளித்து வருகிறார்.

இன்னும் கூட்டணிக்கு கால அவகாசம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்பதே அவரது பதிலாக இருந்து வருகிறது.

Tags:    

Similar News