விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம்- செல்லூர் ராஜூ
- கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது.
- ஓ.பன்னீர் செல்வம் நாடகமாடுகிறார்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் பகுதியில் புதிய நியாய விலை கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து பல்வேறு முறை சட்டசபையில் பேசியிருக்கிறேன். தொகுதி வாரியாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்தும் வகையில் மதுரை மேற்கு தொகுதியில் 10 திட்டங்களை செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். ஆனால் ஒரே ஒரு திட்டம் மட்டும் செயல்முறைக்கு வந்துள்ளது.
தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு எதிரான பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தி.மு.க. அரசுக்கு எதிராக சுனாமி போல தமிழக மக்கள் வெகுண்டு எழுந்து உள்ளனர்.
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு எதிராக தமிழகத்தில் எதிர்ப்பு அலை வீசி வருகிறது.
நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்ததால் நாங்களும் அவரை விமர்சனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்களோடு மக்களாக நின்றார். மக்கள் துயரங்களில் பங்கெடுத்தார். மக்களுக்கான திட்டங்களை செய்தார்.
ஆனால் அவரோடு விஜயை ஒப்பிட முடியாது. அவர் அறைக்குள் இருந்து அரசியல் செய்கிறார். கரூர் சம்பவத்தில் 41 உயிர்கள் பலியான போது கூட பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் வந்து அனுதாபம் தெரிவிக்க அவரால் முடியவில்லை. இது வினோதமாக இருக்கிறது. அவரை தமிழக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
கடந்த தேர்தல்களில் தி.மு.க. வரலாறு காணாத பல தோல்விகளை கண்டுள்ளது. 1991-ல் கருணாநிதி மட்டும் வெற்றி பெற்றார். பின்பு அவரும் அந்த பதவியை ராஜினாமா செய்தார். ஆனாலும் தொடர்ந்து பத்திரிகைகளில் தனது உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதி கட்சியை வளர்த்தார். எனவே தேர்தல் தோல்வி குறித்து தி.மு.க. பேசக்கூடாது.
அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம். வருகிற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.
அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பத்திரிகைகள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர், அ.தி.மு.க.வின் கொள்கை கோட்பாடுகள் தெரிந்து எப்படி நடக்க வேண்டும் என்று அவருக்கு தெரியாதா? இதை முறைப்படி எப்படி தெரிவிக்க வேண்டும்.
எனவே ஓ.பன்னீர் செல்வம் இந்த விஷயத்தில் நாடகமாடுகிறார். கருணாநிதி, ஸ்டாலின் நாடகங்களை எல்லாம் பார்த்து விட்டோம். எனவே ஓ.பன்னீர் செல்வத்தின் நாடகம் எங்களிடம் எடுபடாது என்றார்.