பெருங்குடி குப்பை கிடங்கில் வீசப்பட்ட பீகார் வாலிபரின் மனைவி உடல் இன்று மீட்பு- 100 போலீசார் 4 நாட்களாக தேடி கண்டுபிடித்தனர்
- கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
- ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.
சென்னை:
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.
முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.
கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.