இலவச வாக்குறுதிகளுக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதிகளை அறிவிக்கின்றன.
- இதுபோன்ற அறிவிப்புகளால் மாநில அரசுக்கு அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது.
சென்னை:
நாடு முழுவதும் வாக்காளர்களைக் கவரும் நோக்கில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகின்றன. இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஏற்கனவே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்பில் வக்கீல் ஜெயசுகின், நரேந்தர்குமார் வர்மா ஆகியோர் தாக்கல் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச அறிவிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதால் மாநில அரசுக்கு நிதிச்சுமை ஏற்படுகிறது.
அறிவிக்கப்படும் இலவச வாக்குறுதி திட்டங்களால் ஏற்படும் நிதிசார் பாதிப்புகள், அதற்கான நிதி முதலீடு குறித்து அரசியல் கட்சிகள் வெளியிட வேண்டும்.
எனவே, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதற்கு தடை விதிக்க மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு முன் இலவச வாக்குறுதி திட்டங்களை அரசியல் கட்சிகள் அறிவிப்பதை தடுக்க தேர்தல் நடத்தை விதிகளைத் திருத்தவேண்டும்.
இலவச வாக்குறுதி திட்டங்களின் சாத்தியக் கூறுகளை ஆராய நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி போன்றவற்றின் நிபுணர்களைக் கொண்ட சுதந்திரமான குழுவை கொண்டு ஆராய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இதே கோரிக்கைகள் கொண்ட வழக்குகளுடன் இந்த மனுவை இணைத்து விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.