'தன்னிடம் சமரசமாகிறவர்களுக்கு பரிசு' - தமிழ்நாடு அரசு விருதுகள் குறித்து இயக்குநர் கோபி நயினார் விமர்சனம்
- அறம் படம் இரண்டு பிரிவுகளில் பரிசு வென்றுள்ளது.
- அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும்..
தமிழ்நாடு அரசு 2016 முதல் 2022 வரையிலான ஏழு ஆண்டுகளுக்கான நீண்டகாலமாக நிலுவையில் இருந்த தமிழ் திரைப்பட விருதுகளை நேற்று அறிவித்தது. சிறந்த திரைப்படங்களுக்கான விருது மாநகரம், புரியாத புதிர், அறம், விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த நடிகைகளுக்கான விருது கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமால் ஜோஸ், சாய்பல்லவி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் இந்த விருதுகள் தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாடு அரசு சிறந்த இயக்குனருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருந்தால் என்னை நானே சந்தேகப்பட்டிருப்பேன். உலகம் முழுவதும் முதலாளித்துவத்தை, பல்வேறு ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசு தன் சொந்த நாட்டில் தன் உரிமைகளுக்காக போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை இரு வேறு பிரிவுகளாக பிரிக்கும்..
உரிமை கோருபவர்களை தன் அமைப்புக்கும், அரசுக்கும் எதிரானவர்களாகவும், தன்னிடம் சமரசமாகிறவர்களை அவ்வப்போது பரிசுகள் கொடுத்து மகிழ்வித்து போராடுபவர்களுக்கு எதிராக மிக ரகசியமாக அணிப்படுத்தும். இப்போது தமிழ்நாட்டில் அது நடக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் கோபி நயினாரின் அறம் படம் இரண்டு பிரிவுகளில் விருது வென்றுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு அறம் படத்திற்காக திராவிடர் கழகம் வழங்கிய விருதை இவர் திருப்பி அளிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.