தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சருடன் சந்திப்பு- பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் கோரிக்கை

Published On 2025-09-27 22:21 IST   |   Update On 2025-09-27 22:21:00 IST
  • பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
  • தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி மக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உடன் முதலமைச்சரை இன்று சந்தித்து உரையாடினர்.

இந்த சந்திப்பின்போது தொகுதிகளின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து விஜய் வசந்த் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

குமரி மாவட்டத்தில் மண் எடுப்பதற்கு தடை உள்ள காரணத்தால் அண்டை மாவட்டத்தில் இருந்து 4 வழி சாலை பணிகள் மற்றும் ரெயில் இரட்டிப்பு பணிகளுக்கு மண் கொண்டு வரப்படுகிறது. ஆனால், தற்போது மண் தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தால் இந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களின் தேவைகளுக்கும் மண் தேவைபடுகிறது. ஆகவே தட்டுபாடின்றி மண் கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனவும், இயற்கை சீற்றத்திலிருந்து கடற்கரை கிராமங்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பு சுவர் மற்றும் தூண்டில் வளைவுகள் கட்ட சிறப்பு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், குமரி மக்களின் நெடு நாள் கனவான குமரி விமான நிலையம் சாத்தியம் ஆகும் வகையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார்.

மேலும் விவசாயிகள் பயனடையும் வகையில் குளங்களை தூர் வாரி, இடிந்து கிடக்கும் வாய்க்கால் கரைகளை கட்டி முடிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

Tags:    

Similar News