'தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்காக அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறோம்' - பிரதமர் மோடி
- மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் இலக்கு
- தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு உள்ளது மத்திய அரசு
ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வகையான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தந்தார். திட்டங்களை தொடங்கி வைத்ததோடு சிலத் திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.
தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர்,
"திருச்சிக்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று ரூ.5,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். இவை உண்மையிலேயே தமிழ்நாட்டிற்கு தேவையானவை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எரிவாயு கட்டமைப்புக்கு இன்று அடிக்கல் நட்டப்பட்டுள்ளது. ரூ.3,700 கோடி மதிப்பிலான இந்த கட்டமைப்பு நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யப்படும். இயற்கை எரிவாயு காற்று மாசை குறைக்கும். இது நான்கு கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இருக்கும்.
சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய ஆலை நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே உள்ள மிகப் பெரிய ஆலைகளில் ஒன்று. இது தமிழ்நாடு தொழிற்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். மசகு எண்ணெய் தயாரிப்பு, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாக குறைக்க உதவும். தேசத்தின் பொருளாதாரத்தையும் பாதுகாக்கும்.
370 கிலோ மீட்டர் நீள ஊரகப் பகுதி சாலைகளை தொடங்கி வைத்துள்ளோம். இவை பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் மூலம் போடப்பட்டுள்ளது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைவார்கள். இது ஊரகப் பகுதி பொருளாதாரத்தை உயர்த்தும்.
கடந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவிற்காக கங்கைகொண்டசோழபுரம் வந்திருந்தேன். இன்று நாம் அங்கு ஒரு நெடுஞ்சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். இது கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கும். கடந்தவாரம் மதுரை வந்தபோது அம்ரித் பாரத் திட்டத்தின்படி 8 மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை தொடங்கிவைத்தேன். இன்று பல புதிய ரயில்சேவைகளை தொடங்கி வைத்துள்ளோம். இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். உள்ளூர் பொருளாதாரம் உயரும். ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேம்பட்ட இந்தியாவை உருவாக்க, மேம்பட்டதொரு தமிழ்நாட்டை உருவாக்குவதுதான் இலக்கு. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு உள்ளது மத்திய அரசு. மாநிலத்தின் மேம்பாட்டுக்கு அல்லும், பகலும் அயராது பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்து பாடுபடுவோம்" என தெரிவித்தார்.