தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம்- திண்டுக்கல் சீனிவாசன்
- பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
- அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாநகர் வடக்கு பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசியதாவது,
சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க. தலைமையிலான சிறப்பான கூட்டணியை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமைத்துள்ளார். அவருக்கு 1½ கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் விலைவாசி உயர்வு, தி.மு.க. ஆட்சியின் வேதனைகள், கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள், தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக் ஊழல்களை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆட்சி எப்போது முடியும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். வருங்காலம் நமது காலம். நமது பணியை செவ்வனே செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி அமையும். இந்த கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் இடங்களை பிரித்துக் கொடுப்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். தேர்தல் நேரத்தில் இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும். வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்த போது அதனை ஆதரித்து அ.தி.மு.க. வாக்களித்தது. எனவே நாங்கள் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. பா.ம.க.வில் நடப்பது உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலைமையிட முடியாது.
அமைச்சர் பொன்முடியை போல தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். ஆனால் அவர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதில்லை. அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்றே அவருக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.