செய்திகள்
பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை - பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு

Published On 2018-12-19 06:13 GMT   |   Update On 2018-12-19 06:15 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #OldCoutralam
தென்காசி:

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.

குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவு தண்ணீர் விழுந்தது.



இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam

Tags:    

Similar News