தொடர் சறுக்கல்: ரூபன் அமோரிமை பதவிநீக்கம் செய்த மான்செஸ்டர் யுனைடெட்!
- கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
- பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ரூபன் அமோரிம் இன்று நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிளப் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் அணியில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில்,
"ரூபன் நவம்பர் 2024-இல் நியமிக்கப்பட்டார், மேலும் மே மாதம் பில்பாவோவில் நடந்த யுஇஎஃப்ஏ (UEFA) யூரோப்பா லீக் இறுதிப்போட்டிக்கு அணியை வழிநடத்திச் சென்றார்.
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் யுனைடெட் ஆறாவது இடத்தில் இருக்கும்நிலையில், இந்த மாற்றம் தேவை என அணியின் தலைமை முடிவு செய்துள்ளது. இது அணி பிரீமியர் லீக் தரவரிசையில் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கான சிறந்த வாய்ப்பை வழங்கும்.
கிளப்பிற்கு ரூபன் ஆற்றிய பங்களிப்பிற்கு கிளப் நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறது. புதன்கிழமை (ஜன.7) பர்ன்லி அணிக்கு எதிரான போட்டியில் டேரன் பிளெட்சர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்பார்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபன் அமோரிம் ஒரு போர்ச்சுகீசிய கால்பந்து பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஆவார். முன்னதாக ஸ்போர்டிங் சிபி அணியின் பயிற்சியாளராக இவர் இருந்தபோது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்கு லீக் பட்டத்தை வென்று கொடுத்தார். அதற்கு முன்பு பிராகா (Braga) அணியிலும் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். நவம்பர் 2024-ல் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். இவரது தலைமையின் கீழ் அந்த அணி 2025-ஆம் ஆண்டு யுஇஎஃப்ஏ யூரோப்பா லீக்கில் (UEFA Europa League) இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.