கிரிக்கெட் (Cricket)

டி20 உலகக்கோப்பை: கிறிஸ் கெய்ல் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் பர்ஹான்

Published On 2026-03-01 11:45 IST   |   Update On 2026-03-01 11:45:00 IST
  • பாகிஸ்தான் தொடக்க வீரர் பர்ஹான் பல சாதனைகளை புரிந்தார்.
  • இந்த உலக கோப்பையில் பர்ஹான் 2-வது சதத்தை பதிவு செய்தார்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 ரன்னில் இலங்கையை தோற்கடித்தது.

இந்த வெற்றியால் எந்த பலனும் இல்லாமல் போனது. 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தால் மட்டுமே அந்த அணி அரைஇறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இருந்தது. ரன்ரேட் அடிப் படையில் நியூசிலாந்து தகுதி பெற்றது. பாகிஸ்தான் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

பாகிஸ்தான் வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க வீரர் பர்ஹான் பல சாதனைகளை புரிந்தார். நேற்று அவர் சதம் அடித்தார். 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 100 ரன் எடுத்தார்.

இந்த உலக கோப்பையில் பர்ஹான் 2-வது சதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்பு கடந்த 18-ந்தேதி நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்து இருந்தார். இதன் மூலம் ஒரே உலக கோப்பையில் 2 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை பர்ஹான் படைத்தார்.

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் தான் 20 ஓவர் உலக கோப்பையில் அதிகபட்சமாக 2 சதம் அடித்து இருந்தார். 2007 மற்றும் 2016 உலக கோப்பை யில் அவர் செஞ்சூரி அடித்தார். தற்போது பர்ஹான் அவருடன் இணைந்தார்.

இந்த உலக கோப்பையில் பர்ஹான் 6 ஆட்டத்தில் 383 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்து இருந்த வீராட்கோலியை அவர் முந்தி சாதனை படைத்தார்.

வீராட்கோலி 2014-ல் 319 ரன் எடுத்து இருந்தார். இதுதான் உலக கோப்பை யில் அதிக ரன்னாக இருந்தது. இதை பர்ஹான் முறியடித்து புதிய சாதனை புரிந்தார்.

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதிய ஆட்டத்தில் மொத்தம் 419 ரன்கள் (212+207) குவிக்கப்பட்டது.உலக கோப்பை ஒரு ஆட்டத்தில் 3-வது அதிகபட்ச ரன் இதுவாகும்.

Tags:    

Similar News