தமிழ்நாடு செய்திகள்

'திராவிட மாடல் அரசு கல்வியை மூலதனமாக நம்புகிறது' - நடிகர் மணிகண்டன்!

Published On 2026-01-05 18:10 IST   |   Update On 2026-01-05 18:10:00 IST
  • வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம்.
  • பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், திரைப்பட நடிகர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி,

"இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது எனக்கு பெரிய சந்தோஷம், பெருமையும்கூட. நம்மை படிக்கவைக்க ரொம்ப நாட்களாகவே இந்த அரசு திட்டம் போட்டு கொண்டுவருகிறது. வேறு எதையும் கொடுப்பதைவிட அடுத்த தலைமுறைக்கு கல்வியை கொடுப்பது அவசியம். அதற்கான முக்கிய பங்கை இந்த அரசு மறுபடி மறுபடி கொடுத்துக்கொண்டே வருகிறது. அதற்கு மிகவும் நன்றி. ஒருவரின் வளர்ச்சிக்கு அவரின் அறிவுதான் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களை முன் நகர்த்தி செல்ல பெரும் பங்கு வகிக்கிறது அரசு. அதற்கு ரொம்ப நன்றி." என தெரிவித்தார். 


மடிக்கணினிகள் வழங்கும் விழாவில் விஜய் சேதுபதி 

நடிகர் மணிகண்டன் பேசியதாவது, 

"தனது திறனை வெளிப்படுத்த இருக்கும் வசதி, வாய்ப்புகள் கிடைக்காத ஒரு மனிதனின் சோகத்தைவிட, பெரியசோகம் இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. எவ்வளவோ திறமைகள் இருந்தும், அதனை வெளிப்படுத்த சரியான வசதிகள் இல்லாத எத்தனையோ பேரை நான் பார்த்துள்ளேன். இனிமேல் அதுபோல நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற நிலையை இங்குள்ள முத்தான திட்டங்கள் உருவாக்கியுள்ளன. அதற்காக தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய நன்றிகள்.

முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையில் நான் நிறைய திட்டங்களை பார்த்துள்ளேன். உலக வரலாற்றில் ஒரு அரசு மூலதனமாக எதனை நம்புகிறது என்பது மிக முக்கியமான ஒன்று. பயம், மிரட்டல், பணம், பக்தி என நிறையவற்றை உலக அரசுகள் நம்பியுள்ளது. ஆனால் திராடவி மாடல் அரசு அறிவை, கல்வியை மூலதனமாக நம்புகிறது. அது மிகப்பெரிய மூலதனம் என்பதற்கான சான்றாக, இன்று விதைக்கும் விதைகளின் பலனை எதிர்காலத்தில் நிச்சயமாக பார்ப்போம்." எனப் பேசினார். 

Tags:    

Similar News