SIR-ஐ எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடுவேன்: மம்தா பானர்ஜி ஆவேசம்
- SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர்.
- மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொண்டது. இதற்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகிறார்.
SIR அச்சம், துன்புறுத்தல் மற்றும் நிர்வாகத் தன்னிச்சையான செயல்களைத் தூண்டிவிட்டு, உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளதாக குற்றசாட்டும் மம்தா பானர்ஜி, இதை எதிர்த்து நீதிமன்றத்தில் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-
மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும், ஏராளமான மக்கள் SIR காரணமாக உயிரிழந்துள்ளதற்கு எதிராக நாளை நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். அனுமதித்தால், உச்சநீதிமன்றத்திற்கும் சென்று, இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராக ஒரு சாதாரண குடிமகனாக நான் முறையிடுகிறேன். நான் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றுள்ளேன்.
தங்கள் வயதான பெற்றோரை அடையாளத்தை நிரூபிப்பதற்காக வரிசையில் நிற்க வைத்தால், பாஜக தலைவர்கள் எப்படி உணர்வார்கள்?. SIR தொடங்கியதிலிருந்து, அச்சத்தின் காரணமாகப் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
என்னை கொல்லும்படி நான் அவர்களுக்கு சவால் விடுகிறேன், ஆனால் நான் என் தாய்மொழியில் பேசுவதை நிறுத்த மாட்டேன்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.