தான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீறியது இல்லை: சசி தரூர்
- நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி.
- முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது.
மத்திய பாஜக அரசுக்கு சாதகமான கருத்துகளை பகிர்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மீது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், தான் ஒருபோதும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மீறியது இல்லை என சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசி தரூர் கூறியதாவது:-
நான் கட்சி நிலைப்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக யார் சொன்னது என்பதுதான் எனது கேள்வி. பல்வேறு விஷயங்களில் நான் என் கருத்துக்களைத் தெரிவித்தபோதும், பெரும்பாலான விஷயங்களில் நானும் கட்சியும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருந்தோம்.
நான் உண்மையில் என்ன எழுதினேன் என்பதை மக்கள் படித்திருக்கிறார்களா என்று நான் கேட்டால், பெரும்பாலானோர் படித்திருக்கவில்லை. முழு உரையையும் படித்த பிறகுதான், உண்மையான விஷயம் அவர்களுக்குப் புரிகிறது
தான் 17 ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன், சக தோழர்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறேன். இப்போது திடீரென்று எந்த தவறான புரிதலுக்கும் அவசியமில்லை.
நான் பிரதமர் மோடியை எங்கே புகழ்ந்தேன் என்று சுட்டிக்காட்டும்படி மக்களிடம் கேட்டேன். முழுப் பதிவையும் படித்தால், அதில் அப்படி எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரியும்
இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.
மேலும், "காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிறகுதான் இந்த பிரச்சனைகள் தொடங்கியதா என்று கேட்டதற்கு "நான் போட்டியிட்டு தோற்றேன். அந்த அத்தியாயம் அங்கேயே முடிந்துவிட்டது. இதில் நான் எந்தப் பெரிய விஷயத்தையும் பார்க்கவில்லை. கட்சியின் வரலாற்றில் பல தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன, பலரும் வெற்றி பெற்றும் தோற்றும் உள்ளனர்" என்றார்.
சசி தரூர் பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்த நாளையொட்டி "98-வது பிறந்த நாள் கொண்டாடும் அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். மக்களுக்கு சேவை செய்ய அவர் காட்டிய அர்ப்பணிப்பு, கண்ணியம் மற்றும் நவீன இந்தியாவுக்கான பாதையை வடிவமைப்பதில் அவரது பங்கு அழியாதவை.சேவை வாழ்க்கைக்கு முன்மாதிரியான ஒரு உண்மையான அரசியல்வாதி" எனப் புகழ்ந்து பாராட்டியிருந்தார்.
ஏற்கனவே, பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சசி தரூர் கோபத்தில் இருந்தனர். தற்போது அத்வானியை புகழ்ந்து பேசியது மேலும், ஆத்திரமடையச் செய்துள்ளது.
இந்த நிலையில் நான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் விலகியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.