ரன் குவிப்பதை பற்றிதான் சிந்திக்கனும்: SKY-க்கு ரிக்கி பாண்டிங் அட்வைஸ்
- 2025-ல் 21 போட்டிகளில் 19 இன்னிங்சில் வெறும் 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அவரது ஃபார்ம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் சமீப காலமாக ரன்கள் குவிக்க திணறி வருகிறார். 2025-ல் 21 போட்டிகளில் 19 இன்னிங்சில் வெறும் 218 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். சராசரி 13.62 ஆகும்.
டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அவரது ஃபார்ம் இந்திய அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது.
இந்த நிலையில் ரிக்கி பாண்டிங் "சூர்யகுமார் யாதவ் ரன்கள் குவிப்பது பற்றிதான் நினைக்க வேண்டும். அவுட்டாவது குறித்து சிந்திக்கக் கூடாது. அவருடைய சமீபத்திய ஃபார்ம் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக ஒரு நிலையான மற்றும் நம்பகமான பங்களிப்பாளராக இருந்து வருகிறார், ஆனால் சமீப காலமாக அவரால் அந்தச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
அவர் ஒரு சுவாரஸ்யமான வீரர். ஏனென்றால் அவர் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஆட்டத்தைத் தொடங்க ஆறு, எட்டு அல்லது பத்து பந்துகளை எடுத்துக்கொண்டு, பின்னர் அதன்பிறகு தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்துவார்.
அவர் தனது அனைத்து ஷாட்களையும் ஆடுகிறார். தன்னை நம்புகிறார். டிராவிஸ் ஹெட்டைப் போலவே, ஆட்டமிழப்பதைப் பற்றி ஒருபோதும் பயப்படுவதில்லை என்பதுபோல் தெரிகிறது.
ரன்கள் எடுப்பதைப் பற்றி யோசி, ஆட்டமிழப்பதைப் பற்றி யோசிக்காதே. உன்னை நீயே நம்பு, உன் மீது நம்பிக்கை வை. டி20 வடிவத்தில் உலகின் சிறந்தவன் என்பதை நிரூபித்திருக்கிறாய், இப்போது மீண்டும் ஒருமுறை அதை அனைவருக்கும் நிரூபித்துக் காட்டு. அவரிடம் நான் இதைத்தான் சொல்வேன்" என்றார்.