கிரிக்கெட் (Cricket)

கவுகாத்தியில் 3 போட்டி... ஜெய்ப்பூரில் 4 ஆட்டத்தில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் சம்மதம்

Published On 2026-02-21 12:49 IST   |   Update On 2026-02-21 12:49:00 IST
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது.
  • ஜெய்ப்பூரில் 4 போட்டிகளில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் ஒத்துக்கொண்டு உள்ளது.

ஜெய்ப்பூர்:

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி மொத்தம் 84 ஆட்டங்களை கொண்டது.

இந்த போட்டி குறித்த அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 4 ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களுக்கும், ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். சீசனில் உள்ளூர் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெறாது என்று தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

இந்த நிலையில்தான் ஜெய்ப்பூரில் 4 போட்டிகளில் விளையாட ராஜஸ்தான் ராயல்ஸ் ஒத்துக்கொண்டு உள்ளது. ராஜஸ்தான் முதல் மந்திரி பஜன்லால் சர்மா-ராஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் ரஞ்ஜித் பர்தாகூர் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது அந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

அதே நேரத்தில் மற்ற 3 ஆட்டங்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த காலங்களில் ராஜஸ்தான் அணியின் உள்ளூர் ஆட்டங்கள் கவுகாத்தி, ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் உள்ளூர் ஆட்டம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு அந்த அணி முதல் முறையாக ஐ.பி.எல்.கோப்பையை கைப்பற்றியது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பலியானார்கள். இதனால் அங்கு போட்டியை நடத்த மாநில அரசு தடை விதித்தது. பின்னர் அதை விலக்கிக் கொண்டது.

தற்போது ஐ.பி.எல். போட்டிக்கு மாநில அரசு அனுமதி கொடுத்து விட்டது. பெங்களூர் அணி அங்கு விளையாடுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

Tags:    

Similar News