கிரிக்கெட் (Cricket)

இன்று கடைசி போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றுமா இந்திய பெண்கள் அணி?

Published On 2026-02-21 07:39 IST   |   Update On 2026-02-21 07:39:00 IST
  • தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

அடிலெய்டு:

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி அடிலெய்டில் இன்று நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி கேப்டன் சோபி மோலினக்ஸ் கடந்த ஆட்டத்தில் தொடக்க வீராங்கனைகள் ஜார்ஜியா வோல் (88 ரன்). பெத் மூனி (46 ரன்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 9 விக்கெட்டுக்கு 144 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா தவிர மற்றவர்கள் சோபிக்கவில்லை.

கடைசி 4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது பாதகத்தை ஏற்படுத்தியது. பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் சிறப்பாக செயல்பட்டனர். மற்ற பவுலர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக விளங்கும் சோபி மோலினக்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த இந்திய பேட்டர்கள் நிலைத்து நின்று நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தங்களது முழுப்பலத்தையும் வெளிக்காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

Tags:    

Similar News