என் பசங்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்- கண்ணீருடன் விலகிய ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர்
- பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல.
- அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.
டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றுகள் இன்றுடன் முடிவடைகிறது. இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஓமன் அணிகள் மோதுகிறது.
இந்த தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று கனடாவுடன் மோதியது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக ஜொனாதன் ட்ராட் கண்ணீருடன் கூறியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து அவர் கூறியதாவது:-
பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவது என்பது தனது சொந்த முடிவு அல்ல. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. இதற்கான நேரம் சரியானதா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அணியின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணி அடைந்த முன்னேற்றத்தைக் கண்டு பெருமைப்படுகிறேன். குறிப்பாக வீரர்கள் களத்திற்கு வெளியிலும் முன்னேற்றம் கண்டு, அவர்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை மாற்றியதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது எதிர்காலத் திட்டம் குறித்து தற்போதைக்குத் தெரியவில்லை. சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு அடுத்தகட்ட முடிவை எடுக்கப்போகிறேன். எப்போதாவது ஒருமுறை தனது சொந்த நாடான இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகும் வாய்ப்பு கிடைத்தால் அதை விரும்புவதாக அவர் தெரிவித்தார்.