'காலம் தந்துள்ள 2வது நெருப்பு ஏஐ; அதனை சரியாக பயன்படுத்தவேண்டும்' - மாணவர்களிடையே மு.க.ஸ்டாலின் பேச்சு
- தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம்.
- தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்,
"மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து ஒட்டுமொத்த உலகமும் நம் கைகளில் எட்டக்கூடிய அளவில் உள்ளது. அதை உங்கள் கையில் கொடுப்பதுதான் நம் திராவிட மாடல் ஆட்சி. 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். அதனால் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் நம் மாணவர்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என நம் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி. அதனால்தான் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் உலகளவில் உயரிய பதவிகளில் உள்ளனர்.
தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம். அதற்கு உதாரணம்தான் இந்தவிழா. உங்கள் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் இயக்கம் செய்யப்பட்டால்தான் புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழும். தொழில்நுட்பம் வளரும். மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கக்கூடிய இரண்டாவது நெருப்புதான் ஏஐ. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்று உங்கள் கைகளில் மடிக்கணினிகள் கொடுத்திருக்கிறோம்.
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இன்று இருக்கும் இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்கவேண்டும். எல்லோரையும் வாழவைக்க வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணம். இது செலவுத்திட்டம் அல்ல. கல்விக்கான முதலீடு. நீங்கள் படிப்பதற்கான எல்லா திட்டங்களையும் உருவாக்கி தருகிறோம். படித்து உங்கள் எதிர்காலத்தை நல்லப் பாதையாக தேர்ந்தெடுங்கள். பட்டப்படிப்பு மட்டும் போதாது. வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நீங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தை படிப்பது என்பது ஆப்சன் கிடையாது. அதனை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.
ஏஐ மனிதர்களுக்கு மாற்று கிடையாது. நம் வேலைகளை சிறப்பாக செய்ய நமக்கு துணைநிற்கும். கடந்த தலைமுறையினர் அறிவை வளர்க்க புத்தகத்தை தேடி அலையவேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த வளர்ச்சியை குறைசொல்லி முடங்கிப்போவது முட்டாள்களின் பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொடவேண்டியதுதான் உங்களின் வேலை.
இப்போது வாங்கும் மடிக்கணினிகளை படம் பார்ப்பதற்கு பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்கள் வேலைக்கான மூலதனமாக பார்க்கப் போகிறீர்களா? இதுதான் எங்கள் கேள்வி. எல்லாவற்றிலும் நன்மை, தீமை என இரண்டும் பக்கம் இருக்கிறது. உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள்தான் முதலிடத்தில் இருக்கவேண்டும். உலகத்தோடு போட்டிப் போடுங்கள். அதற்கான கருவிதான் உங்கள் கையில் கொடுக்கிறோம்.
நான் எப்போதும் சொல்வதுதான். படிங்கள், படிங்கள், படிங்கள். உங்களை பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கும். தமிழ்நாட்டிற்கு இன்னும் வளர்ச்சி வேண்டும். உங்கள் கையில்தான் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு வெல்லட்டும்" என தெரிவித்தார்.