புதுச்சேரி

விஜய் பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர் விடுவிப்பு

Published On 2025-12-10 08:03 IST   |   Update On 2025-12-10 08:03:00 IST
  • போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
  • புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.

புதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் த.வெ.க. பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. விஜய் பொதுக்கூட்டம் நடந்த உப்பளம் ஹெலிபேடு மைதான நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தி பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

நேற்று காலை 8 மணி அளவில் வெள்ளைச்சட்டை அணிந்து டிப்-டாப்பாக நுழைவு வாயிலை கடந்தபோது எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டபோது இடுப்பில் கைத்துப்பாக்கி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனே அந்த நபரை ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் தனியாக அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் (வயது 45) என்பது தெரிய வந்தது. மேலும் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதையும் போலீசாரிடம் காட்டினார்.

பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தினர். இதில் டேவிட், மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும், த.வெ.க. சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவுக்கு, துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக இருப்பதும் தெரியவந்தது. புதுவை பொதுக்கூட்டத்துக்கு வந்த பிரபுவுக்கு பாதுகாப்பு அளிக்க டேவிட் துப்பாக்கியுடன் வந்ததாக கூறினார்.

இந்நிலையில் த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபுவின் தனி பாதுகாவலர் டேவிட்டை காவல்துறை விடுவித்தது. துப்பாக்கிக்கான லைசென்ஸ் அவர் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் விடுவிக்கப்பட்டார்.

துப்பாக்கி தற்போது காவல்துறை வசம் உள்ளது. விசாரணை நிறைவடைந்ததும் துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News