மணிப்பூர் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு - இன்னும் கைதாகாத குற்றவாளிகள்
- வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
- குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் இனக்கலவரத்தின் போது கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட குக்கி சமூகத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், நீண்ட நாள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
2023-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி, இம்பாலில் உள்ள நியூ செக்கோன் பகுதியில் வைத்து இந்தப் பெண் கடத்தப்பட்டார்.
ஒரு கும்பல் இவரைப் பிடித்துச் சென்று பல இடங்களில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.
படுகாயங்களுடன் இருந்த அவரை ஒரு ஆட்டோ ஓட்டுநர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.
வன்கொடுமையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாகத் தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், இறுதியில் கடந்த ஜனவரி 10 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக 2023 ஜூலை மாதம் FIR பதிவு செய்யப்பட்டு, வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், வழக்குத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை ஒருவரைக் கூட சிபிஐ கைது செய்யவில்லை.
"அந்தச் சம்பவத்திற்கு முன்பு என் மகள் மிகவும் துடிப்பாக இருப்பாள். ஆனால், அந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவள் சிரிப்பதையே மறந்துவிட்டாள். யாரிடமும் பேசாமல் ஒரு அறைக்குள்ளேயே முடங்கிவிட்டாள்" என்று அவரது தாய் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
பெண்ணின் மரணத்திற்கு குக்கி சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெண்ணுக்கு நீதி கிடைக்க மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
குற்றவாளிகள் இன்னும் சுதந்திரமாகத் திரியும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் நீதிக்காகக் காத்திருந்தே உயிர் நீத்துள்ளது மணிப்பூர் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.