இந்தியா

போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு- பா.ஜ.க. தேசிய தலைவர் தேர்தலுக்கு நிதின் நபின் நாளை மனுதாக்கல்

Published On 2026-01-18 13:36 IST   |   Update On 2026-01-18 13:36:00 IST
  • நாளை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.
  • புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

அகில இந்திய பா.ஜ.க தலைவர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜ.க-வை பொறுத்தவரை அகில இந்திய தலைவர் பதவி என்பது 2 ஆண்டுகள் ஆகும். தற்போதைய தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2020-ம் ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு 2 முறை அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

ஆனாலும் புதிய தலைவரை தேர்வு செய்வதில் காலதாமதம் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் புதிய செயல் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜ.க-வை பொறுத்த வரை செயல் தலைவராக இருப்பவர்கள் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம். அப்படித்தான் ஜே.பி.நட்டாவும் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.

தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் மதியம் 12 மணியளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். புதிய தலைவரை தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்.

போட்டி இல்லாதபட்சத்தில் மனுதாக்கல் செய்தவர் புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். அந்த வகையில் நிதின் நபின் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. நாளை மறுநாள் அவர் புதிய தலைவராக பதவி ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். அவர்கள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

Tags:    

Similar News