மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது- அசாம் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
- பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.
- அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன.
பிரதமர் மோடி இன்று அசாமின் நாகலாண்ட் மாவட்டத்தில் உள்ள காளியாபோரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.6,950 கோடி மதிப்புள்ள காசி ரங்கா மேம்பாலத் திட்டத் திற்கு அடிக்கல் நாட்டினார்.
86 கி.மீ நீளமுள்ள காசிரங்கா மேம்பாலத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு தேசிய நெடுஞ்சாலைத் திட்டமாகும்.
மேலும், காணொளி காட்சி மூலம் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரெயில்களான கவுகாத்தி (காமாக்யா)- ரோஹ்தக் அம்ரித் பாரத் விரைவு ரெயில், திப்ருகர்- லக்னோ (கோமதி நகர்) அம்ரித் பாரத் விரைவு ரெயில்களைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
அசாமில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், வளர்ச்சியே பிரதானம் என்ற பா.ஜ.கவின் தாரக மந்திரத்தை வலுப்படுத்தியுள்ளன. அசாமின் காசிரங்கா உயர்மட்டப் பாலம் வெள்ளக் காலங்களில் வனவிலங்குகளுக்குப் பாதுகாப்பான பாதையை வழங்க உதவும்.
நிலங்களை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம் பா.ஜ.க அரசு அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறது.
அசாமில் முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் வாக்குகளுக்காக நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்தன. வெறும் அரசாங்கத்தை அமைப்பதற்காகவும், சில வாக்குகளைப் பெறுவதற்காகவும் அவர்கள் உங்கள் நிலங்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.
ஊடுருவல்காரர்கள் அசாம் மற்றும் நாட்டிற்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர். பல தசாப்தங்களாக அசாமில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஊடுருவல் அதிகரித்துக்கொண்டே இருந்தது. நீங்கள் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாட்டில் அனைவரின் முதல் தேர்வாக பா.ஜ.க மாறியுள்ளது.கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பா.ஜ.க மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார் தேர்தலில் பா.ஜ.கவுக்கு மக்கள் பெரிய வெற்றியை தந்தனர். மராட்டியம் மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பா.ஜ.க சாதனை படைத்தது.
எதிர்மறை அரசியல் செய்தியை வழங்குவதால் காங்கிரஸ் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி மும்பையில் பிறந்திருந்தாலும் இன்று அந்த கட்சியை மும்பையில் நடக்கும் தேர்தலில் 4-வது அல்லது 5-வது இடத்தில் தான் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு எந்தவொரு வளர்ச்சித் திட்டமும் இல்லாததால் அது நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது.
இவ்வாறு மோடி பேசினார்.