வருகிற 23-ந்தேதி திருவனந்தபுரம் வருகிறார்: ரெயில்வே- பா.ஜ.க. நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி
- 2 விழாக்களும் திருவனந்தபுரம் கீழக்கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
- பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
கேரள மாநிலத்தில் பா.ஜ.க. வேகமாக வளர்ந்து வருகிறது. திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ்கோபி வெற்றி பெற்று மத்திய மந்திரியாக உள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி, கேரளம் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கேரளா வந்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக பிரதமர் நரேந்திர மோடி கேரளா வர உள்ளார். அவர் வருகிற 23-ந்தேதி கேரள மாநிலத்தில் நடைபெறும் ரெயில்வே நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. டெல்லியில் இருந்து அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு திருவனந்தபுரம் வரும் பிரதமர் மோடி, ரெயில்வே துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அப்போது அவர் 4 புதிய ரெயில்கள் மற்றும் பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவை தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்யும் ஒரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த 2 விழாக்களும் திருவனந்தபுரம் கீழக்கோட்டையில் உள்ள புத்திரிக்கண்டம் மைதானத்தில் நடைபெற உளளது.
திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. முதல்முறையாக கைப்பற்றியதற்காக திருவனந்தபுரம் மாநகராட்சிக்கான தலைநகர மேம்பாட்டு திட்டத்தை பாரதிய ஜனதா கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை முதலில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடத்த ரெயில்வே மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முடிவு செய்திருந்தன. ஆனால் 26-ந்தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை காரணம் காட்டி அந்த இடத்தை தர கேரள அரசு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு தான் புத்திரிக்கண்டம் மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
கேரள மாநில நிகழ்ச்சியை முடித்து விட்டு மதியம் 12.40 மணிக்கு பிரதமர் மோடி சென்னை புறப்பட்டுச் செல்கிறார்.