இந்தியா

உங்கள் கையில் வாக்கு உள்ளது, என் கையில் நிதி உள்ளது - வாக்காளர்களுக்கு அஜித் பவார் பகிரங்க மிரட்டல்

Published On 2025-11-23 10:54 IST   |   Update On 2025-11-23 10:54:00 IST
  • அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக வாங்கிய புகாரில் சிக்கினார்.
  • பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்த அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வராக உள்ளனர்.

அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக தனது நிறுவனத்துக்காக வாங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் சிக்கினார்.

இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் 2 அன்று நடைபெற உள்ளன. இந்நிலையில் நிலையில் அஜித் பவார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

நேற்று மாலேகான் நகரில் உள்ள பாராமதி தாலுகாவில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனது கட்சி வெப்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளார்.

அமைச்சரவையில் நிதித் துறையை அஜித் பவார் தன் வசம் வைத்துள்ளார். இதன் பின்னணியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "நண்பர்களே, மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களைக் உருவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

நீங்கள் எங்களின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை கிராஸ் மார்க் செய்தால், நானும் உங்களை கிராஸ் மார்க் செய்வேன். வாக்கு உங்கள் கையில் உள்ளது, நிதி என் கையில் உள்ளது." என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

இதை விமர்சித்த உத்தவ் சிவசேனா தலைவர் அம்பாதாஸ் தான்வே, "நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது, அது அஜித் பவாரின் வீட்டில் இருந்து அல்ல. பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். 

முன்னதாக கடந்த ஜனவரியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், வாக்களித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் எனக்கு முதலாளிகள் இல்லை, நான் என்ன கூலியா? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News