இந்தியா
null

கவர்னர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அநீதி: ஆனந்த போஸ்க்கு ஆதரவாக பேசிய மம்தா பானர்ஜி

Published On 2026-03-10 22:08 IST   |   Update On 2026-03-10 22:38:00 IST
  • 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி
  • அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் நான் இன்னும் நம்புகிறேன்.

பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்று மேற்கு வங்கம். இங்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் கவர்னர் மூலம் மாநில கட்சிகளுக்கு குடைச்சல் கொடுக்கும் வேலையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு செய்து வருகிறது.

அப்படித்தான் மேற்கு வங்க மாநில கவர்னராக இருந்த ஆனந்த போஸ், மம்தா பானர்ஜி அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். இருந்தபோதிலும் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வந்தார். ஏப்ரல் மாதம் மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த 5-ந்தேதி திடீரென ஆனந்த போஸ் தனது கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து தமிழக கவர்னராக இருந்து ஆர்.என். ரவி மேற்கு வங்க மாநில கவர்னராக பதவி ஏற்றுள்ளார்.

ஆனந்த போஸ் நாளை மேற்கு வங்கத்தில் இருந்து தனது அலுவலகத்தை காலி செய்ய இருக்கிறார். இந்த நிலையில் இன்று அரசு மாளிக்கையில் மம்தா பானர்ஜி, ஆனந்த போஸ்-ஐ சந்தித்து பேசினார்.

அப்போது, ஆனந்த போஸ் நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி, அரசியல் உள்நோக்கம் கொண்டது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:-

அவர் நாளை புறப்பட இருக்கிறார். நான் அவருடன் நீண்ட காலம் பணியாற்றியதால், எங்களுக்குள் நல்ல உறவு நிலவுகிறது. அவரைச் சந்திக்க நான் இங்கு வந்துள்ளேன். அவரது குடும்பத்தினரை நான் அறிவேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.

அவர் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்கு முன்பே ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும், அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்றும் நான் இன்னும் நம்புகிறேன். தேர்தலுக்கு சற்று முன்பு, ஆளுநராக தனது பதவிக் காலத்தை நிறைவு செய்ய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதமுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டார்.

அவர் மாநிலத்தை நன்றாகப் புரிந்துகொள்வதால், வங்காளத்திற்குத் திரும்பி வருமாறு நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News