null
Lok Sabha | அதிக அளவில் குறுக்கீடு..! கிரண் ரிஜிஜுவை வெளுத்து வாங்கிய கவுரவ் கோகாய்- ஆமோதித்து ரிப்ளை அளித்த அமித் ஷா
- சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது.
- ராகுல் காந்தி பேசும்போது அடிக்கடி குறுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு.
இந்திய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. இன்று ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்த விவாதத்தின்போது காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகாய் பேசுகையில் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அடிக்கடி குறுக்கீடு செய்வதாக குற்றம்சாட்டினார். இது தொடர்பாக கவுரவ் கோகாய் பேசியதாவது:-
இந்தத் தீர்மானம் ஓம் பிர்லாவுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் அல்ல, சபையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் பொறுப்பாகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிப்ரவரியில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேச விரும்பியபோது சபாநாயகர், மற்றும் சபாநாயகர் குழுவில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கருவூல பெஞ்சுகளின் மூத்த உறுப்பினர்களால் 20 முறை குறுக்கீடு செய்ததாக நாங்கள் கூறினோம்.
முன்கூட்டியே திட்டமிட்டு அவர் குறுக்கிடப்பட்டார். சபாநாயகர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்கவில்லை. சில முக்கியமான பிரச்சினைகளை அவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும்போது மீண்டும் மீண்டும் குறுக்கிடப்பட்டது.
இவ்வாறு கவுரவ் கோகாய் பேசினார்.
அப்போது கிரண் ரிஜிஜு குறுக்கிட்டு விவாதம் சபாநாயகரைப் பற்றியது. எதிர்க்கட்சிகள் வேறு பிரச்சினைகள் பற்றிப் பேசினால், கருவூல பெஞ்சுகள் பதிலளிக்கும் போது அவர்கள் குறுக்கிடக்கூடாது என்றார்.
உடனே கோகாய் "எதிர்காலத்தில், நாடாளுமன்ற பதிவுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு, எழுத்துப்படிகள் ஆராயப்படும்போது, எதிர்க்கட்சிகளுக்கு அதிக இடையூறு விளைவித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜுதான் என்பதை புள்ளிவிவரங்கள் சொல்லும்" என்றார்.
உடனே அமித் ஷா "நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக கிரண் ரிஜிஜு தான் அதிகம் குறுக்கிட்டார் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சியை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லை" என்றார்.