"இது தனிப்பட்ட கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நேரமல்ல.." சசி தரூருக்கு குட்டு வைத்த காங்கிரஸ் தலைமை!
- கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- 1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்ததற்காக எம்.பி. சசி தரூரை காங்கிரஸ் கட்சித் தலைமை எச்சரித்துள்ளது.
தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்த இது நேரமில்லை என்றும், கட்சியின் கருத்துக்களைப் பொதுமக்களிடம் முன்வைக்க வேண்டும் என்றும் தலைமை தரூருக்கு புத்திமதி வழங்கி உள்ளது.
டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. தரூரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் தரூரின் சமீபத்திய அறிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணான தனிப்பட்ட முறையில் அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்று கூட்டத்தில் சசி தரூருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாகிஸ்தானுடன் இந்தியா மோதல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சண்டை நிறுத்தம் ஆகியவை தொடர்பாக சசி தரூரின் கருத்துக்கள் காங்கிரஸ் தலைமையின் கருத்துக்கு முரணாக அமைத்திருந்தன.
1971-ல் இந்தோ பாக் போரின் போது இந்திரா காந்தி அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்தார். அதே வேளை தற்போதைய சூழலில் அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மோடி இணங்கியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது.
ஆனால் இந்திரா காந்தி இருந்தபோது நிலைமை வேறு, இப்போது சூழ்நிலை வேறு என்றும், அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் காங்கிரசின் கருத்துக்கு முரணான கருத்துக்களை சசி தரூர் ஊடகங்களிடம் கூறினார்.
மேலும் அண்மைக் காலமாகவே பிரதமர் மோடி, மற்றும் பாஜக அரசு செயல்பாடுகளை புகழும் விதமாக சசி தரூர் பேசி வருகிறார். இதன் பின்னணியிலேயே காங்கிரஸ் சசி தரூரை கண்டித்துள்ளது.