SIR பணிக்கு தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் IT Cell-ஆல் உருவாக்கப்பட்டவை - மம்தா
- மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
- பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது.
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
மேற்கு வங்கத்தின் கங்காசாகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்காகப் பயன்படுத்தும் செயலிகள் பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவால் உருவாக்கப்பட்டவை.
தேர்தல் ஆணையத்தின் இந்தச் செயலிகள் அரசமைப்புச் சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானவை.
இவை முழுக்க முழுக்க பாஜகவின் ஐடி செல் கண்காணிப்பில் இயங்குகின்றன. தேர்தல் ஆணையம் அனைத்தையும் தவறாகச் செய்கிறது. உயிருடன் இருப்பவர்களை இறந்தவர்களாகப் பட்டியலிடுகிறார்கள்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் இருப்பவர்களைக் கூட விசாரணைக்கு நேரில் வருமாறு அழைக்கிறார்கள்.
பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு வேண்டிய பலன் கிடைக்காது. மக்களின் குரலாக நான் நீதிமன்றம் செல்வேன்" என்று தெரிவித்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.