இந்தியா

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு

Published On 2025-10-10 17:32 IST   |   Update On 2025-10-10 17:33:00 IST
  • தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
  • நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் இருவேறு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அண்மையில் லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

போராட்டத்தை தூண்டியதாக சுற்றுச்சூழல் ஆர்வலரும் கல்வியாளருமான சோனம் வாங்க்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி அமைந்த நிலையில் அங்கும் மாநில அந்தஸ்துக்கான கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வில் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசுடன் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஆயினும், பஹல்காம் தாக்குதல் போன்ற சம்பவங்களையும் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இது ஒரு தனித்துவமான பிரச்சினை என்றும், பல காரணிகளை பரிசீலிக்க வேண்டியிருப்பதால் கூடுதல் கால அவகாசம் கோரினார்.

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மத்திய அரசின் மேற்பார்வையில் இருந்தபோதுதான் காஷ்மீரில் பஹல்காம் தாக்குதல் நடந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும், ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற மத்திய அரசுக்கு அனுமதி அளித்தால், நாளை அவர்கள் உத்தரப் பிரதேசம் அல்லது தமிழ்நாட்டைக் கூட யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்று மற்றொரு மூத்த வழக்கறிஞர் வாதிட்டார்.

கடந்த 2023 டிசம்பரில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு 2023 டிசம்பர் 11 அன்று, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என்று உறுதி செய்து அதேசமயம், ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்காதது இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மீறுவதாகும் என்றும் மனுதாரர்கள் கோரினர்.

இந்த வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது தொடர்பான மனுவுக்கு நான்கு வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 14 அன்று விசாரணையின்போது, பதிலளிக்க இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலும் தாக்கல் செய்யாத நிலையில் தற்போது மேலும் 4 வார அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News