'வாக்கு திருட்டு' குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
- ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது என கூறி இருந்தார்
- நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, "பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியின் கீழ் உள்ள மகாதேவ்புரா சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மேற்கொண்ட ஆய்வில் 1 லட்சத்து 250 போலி வாக்காளர்கள் இருப்பது கண்டறியப்பட்டது" என கூறி இருந்தார்
இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டிய வாக்கு திருட்டு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ரோகித் பாண்டே என்ற வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தான் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று மனுதாரர் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இதுபோன்ற அரசியல் விவகாரங்களுக்காக நீதிமன்றங்களை மேடையாக்காதீர்கள். உங்கள் புகாரை தீர்மானிக்க தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என்று கூறி வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.