கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால், “2024 தேர்தலில் இது மிகப்பெரும் மைல்கல். மக்கள் மத்தியில் வேற்றுமை உணர்வை ஏற்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் பாஜக-வின் திட்டம் எப்போதும் வெற்றிகரமான ஒன்றாக இருக்காது. இது மிகவும் அப்பட்டமான கருத்து. நாங்கள் மாநிலத்தின் ஏழைகளுக்காக துணை நின்றோம். அவர்கள் செல்வந்தர்களின் பக்கம் இருந்தனர். இறுதியில் ஏழைகள் தேர்தலில் வெற்று பெற்றுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற இருப்பதை அடுத்து, “மாற்றத்திற்கான முடிவை எடுத்திருக்கும் கர்நாடக மக்களுக்கு மிகப் பெரிய சல்யூட். சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் போக்கு முறியடிக்கப்பட்டு இருக்கிறது,” என்று மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கர்நாடக பொறுப்பாளர் ரந்தீப் சிங் சர்ஜ்வாலாவுக்கு இனிப்பு வழங்கி காங்கிரஸ் வெற்றியை கொண்டாடினார்.
கர்நாடக மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தினேஷ் குண்டு ராவ் 105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை அடுத்து, ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.
“மகாத்மா காந்தி அடிகளார் போன்றே, நீங்களும் மக்கள் மனதில் நுழைந்தீர்கள். கனிவுடன் செயல்பட்டால் உலகையே அசைக்க முடியும் என்று நீங்கள் செய்து காட்டியுள்ளீர்கள். நீங்கள் கர்நாடக மக்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், அவர்களும் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை பிரதிபலித்துள்ளனர். வெற்றி பெற்றதோடு, வெற்றி பெற்ற விதத்திற்காகவும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வெளிமாநிலங்களுக்கு அழைத்து செல்லும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.க்களை பெங்களூரு ஓட்டலில் இரவில் தங்க வைத்து, நாளை ஆலோசனை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ள காங்கிரஸ் கட்சி, அமைச்சரவை குறித்து இன்று இரவு உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது.
கர்நாடகா தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர், "வெறுப்பு உணர்வுகளை எதிர்த்து கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அளித்த முக்கியமான 5 வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும்" என்றார்.
பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா கூறுகையில், " பாஜகவுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல. தேர்தல் முடிவுகளால் கட்சி தொண்டர்கள் பீதியடைய தேவையில்லை. கட்சியின் பின்னடைவு குறித்து நாங்கள் சுயபரிசோதனை செய்வோம். இந்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்றார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் பாதையில் உள்ளது. தென் இந்தியாவில் ஒரே மாநிலத்தில் கோட்டையை பிடித்திருந்த பாஜகவை காங்கிரஸ் வெளியேற்றுகிறது. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 135, பாஜக 64 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்விக்கு சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். அதில், " முதலமைச்சர் யார் என்பதை புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்வார்கள். சட்டசபை உறுப்பினர்கள் தேர்வு செய்வதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என்றார்.