இந்தியா
பெண்களின் நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு ஆடும் யானை... விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ
- பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.
- வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யானை இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. யானைக்கு முன்பாக இரண்டு இளம்பெண்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்கள். அப்போது அந்த பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.
பெண்களுடன் இணைந்து ஆடிய யானை என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் வெளியான அந்த வீடியோ சமூக வலைத்தளவாசிகளிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது.
அந்த யானை மகிழ்வுடன் இல்லை எனவும், மன அழுத்தம் காரணமாக அந்த யானை அவதிப்படுவதாகவும் இந்திய வனத்துறை அதிகாரி உள்பட ஏராளமானவர்கள் இந்த வீடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.