தெலுங்கானாவில் டிராக்டர் கவிழ்ந்து 4 பேர் பலி
- கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது
- டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அடுத்த மொகிலி பேட்டாவை சேர்ந்த 20 பெண்கள் மஞ்சள் அறுவடை வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.
நேற்று மாலை வேலை முடிந்து மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. குறுகிய வளைவில் திரும்பும்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.
டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய பெண்களை மீட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி சம்பங்கி சாய்ம்மா (வயது 35),லலிதா (42 ), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
விவசாய வேலைக்குச் சென்று ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.