மதவெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த இந்துத்துவா கும்பல் - சித்தராமையா கண்டனம்
- விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
- முஸ்லிம் தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற இந்த கொடும் செயலை இந்துத்துவ கும்பல் செய்துள்ளது.
கர்நாடகா மாநில பெலகாவி மாவட்டம் ஹுல்லிகட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த கன்னட அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சிக்கொல்லி மருந்து கலந்துள்ளனர். இந்த விஷ நீரை குடித்த 11 பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர். அதில், இந்து வலதுசாரி அமைப்பான ஸ்ரீராம் சேனா அமைப்பின் அப்பகுதி தலைவரும் அடக்கம்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், "சம்பந்தப்பட்ட பள்ளியில் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பணியாற்றி வருவதாகவும் அவர் மீது பழி சுமத்தி வேறு பள்ளிக்கு மாற்றுவதற்காக தான் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்ததாக" தெரிவித்தனர்.
முஸ்லிம் தலைமை ஆசிரியர் மீதான மத வெறுப்பால் பள்ளி தண்ணீர் தொட்டியில் இந்து வலதுசாரி கும்பல் விஷம் கலந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "மத அடிப்படைவாதமும் வகுப்புவாத வெறுப்பும் கொடூரமான செயல்களுக்கு வழிவகுக்கும், மேலும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்திருக்கக்கூடிய இந்த சம்பவம் அதற்கு ஒரு சான்றாகும்" என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்