துப்பாக்கியால் முஸ்லிம்களை குறிபார்க்கும் முதல்வர் ஹிமாந்தா.. அசாம் பாஜகவின் வெறுப்பு வீடியோவால் சர்ச்சை
- "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
- விருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.
"Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வெறுப்பைத் தூண்டும் வகையில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக வலைதளவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அசாம் பாஜக அந்தப் பதிவை நீக்கியது.
அசாம் காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகாய், ஹிமாந்தா பிஸ்வா சர்மாவின் குடும்பத்தினர் அசாம் முழுவதும் சுமார் சுமார் 4,000 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும் இந்த நில மோசடி புகாரிலிருந்து திசைதிருப்பவே பிஸ்வா இத்தகைய வகுப்புவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் பொதுநிகழ்வு ஒன்றில் பேசிய பிஸ்வா, பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களான மியாக்களை தொந்தரவு செய்வதன் மூலமே அசாமிலிருந்து அவர்களை வெளியேற்ற முடியும்.
ஒரு ரிக்ஷா ஓட்டுநர் 'மியா' முஸ்லிமாக இருந்தால், ரூ.5 கட்டணத்திற்கு ரூ.4 மட்டும் கொடுங்கள். அவர்களுக்குத் தொல்லை கொடுத்தால் மட்டுமே அவர்கள் அசாமிலிருந்து வெளியேறுவார்கள்" என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.
மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சுமார் 4 முதல் 5 லட்சம் முஸ்லிம் வாக்குகளை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.