இந்தியா

பஹல்காமில் ரத்தம் இன்னும் காயவில்லை.. பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஏன்? - மோடிக்கு சஞ்சய் ராவத் சரமாரி கேள்வி

Published On 2025-08-23 18:28 IST   |   Update On 2025-08-23 18:28:00 IST
  • இந்து மதம் மற்றும் தேசபக்தியை விட பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் உணர்வுகளைப் புண்படுத்துகிறீர்கள்.
  • பாஜகவுக்கு இதற்குப் பின்னால் ஏதேனும் நிதி பலன்கள் உள்ளதா என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆசிய கோப்பையின் ஒரு பகுதியாக இந்தியா-பாகிஸ்தான் இடையே துபாயில் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்நிலையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் விளையாட மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்ததற்கு சிவசேனா (உத்தவ் பிரிவு) எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் இரத்தம் இன்னும் வறண்டு போகவில்லை. அவர்களின் குடும்பங்களின் கண்ணீர் வறண்டு போகவில்லை.

இதுபோன்ற சூழ்நிலைகளில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது மனிதாபிமானமற்ற செயல்.

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவது நமது வீரர்களின் வீரத்தை அவமதிப்பது மட்டுமல்லாமல், காஷ்மீருக்காக தனது உயிரைத் தியாகம் செய்த ஷியாம் பிரசாத் முகர்ஜி உட்பட ஒவ்வொரு தியாகியையும் அவமதிப்பதாகும்.

இந்து மதம் மற்றும் தேசபக்தியை விட பாகிஸ்தானுடனான கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நீங்கள் நாட்டின் உணர்வுகளைப் புண்படுத்துகிறீர்கள். சிவசேனா உங்கள் முடிவை வன்மையாகக் கண்டிக்கிறது

இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாயவில்லை என்று நீங்கள் ஒரு காலத்தில் சொன்னீர்கள். இப்போது, இரத்தமும் கிரிக்கெட்டும் ஒன்றாகப் பாயுமா? பஹல்காம் தாக்குதலை நடத்தியது ஒரு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புதான்.

அந்தத் தாக்குதல் 26 பெண்களின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்துவிட்டது. அந்த தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நிலையை நீங்கள் கருத்தில் கொண்டீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பாகிஸ்தானுடனான போட்டிகளுக்குப் பின்னால் மிகப்பெரிய பந்தயம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் இருப்பதாகவும், அதில் பல பாஜக உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அமித் ஷாவின் மகனான குஜராத்தைச் சேர்ந்த ஜெய் ஷா தற்போது கிரிக்கெட் விவகாரங்களை கவனித்து வருகிறார். எனவே பாஜகவுக்கு இதற்குப் பின்னால் ஏதேனும் பண பலன்கள் உள்ளதா என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

Similar News