முன்னாள் காதலரின் மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்த ஊசி போட்ட பெண் - ஆந்திராவில் அதிர்ச்சி
- அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
- ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.
ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.
அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.
அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.
அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.
சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.
அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.
ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.