செய்திகள்
டெல்லியில் பிரதமர் மோடியை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசிய காட்சி.

டெல்லியில் பிரதமர் மோடியுடன் பினராயி விஜயன் சந்திப்பு

Published On 2018-09-26 05:21 GMT   |   Update On 2018-09-26 05:21 GMT
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

கோப்புப்படம்

அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

Tags:    

Similar News