null
சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து சென்னைக்கு புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
- சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
- பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது.
கரூருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி சென்றார். அங்கு பஸ்சில் நின்று பேசினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் சி.பி.ஐ. விசாரணையை கண்காணிக்க முன்னாள் நீதிபதி அஜய் ரத்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது.
கரூரில் பல கட்டங்களாக விசாரணை நடந்து வரும் நிலையில் த.வெ.க. 2-ம் கட்ட தலைவர்கள் கடந்த மாத இறுதியில் 3 நாள் டெல்லி அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அவர்களுடன் கரூர் மாவட்ட அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் கரூர் சம்பவத்தின் பெருங்கூட்டத்துக்கு காரணமான விஜய்யிடம் விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்து, நேற்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைப்போல போலீஸ் உயர் அதிகாரிகள் சிலருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இந்த சம்மன் தொடர்பாக வக்கீல்கள் மூலம் பதில் தெரிவிக்கலாமா? என த.வெ.க. நிர்வாகிகள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் விஜய் நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு ஆஜர் ஆவதற்காக விஜய் தனி விமானம் மூலமாக நேற்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டார். அவருடன் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோரும் சென்றனர். இந்த விமானம் காலை 10 மணி அளவில் டெல்லி வந்தடைந்தது. அங்கிருந்து சி.பி.ஐ. அலுவலகத்துக்கு விஜய் காரில் புறப்பட்டார். காலை 11.30 மணி அளவில் லோதி ரோடு பகுதியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு சென்றார்.
உள்ளே சென்ற அவர் முதலில் ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் காத்திருக்க வைக்கப்பட்டார். சிறிதுநேரம் கழித்து விசாரணைக்குழு முன் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். மதிய உணவு இடைவேளைக்கு அவர் வெளியே விடப்படவில்லை. அவருக்காக வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லப்பட்டது.
பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே மாலை 6.30 மணிக்கு விசாரணை முடிந்து விஜய் வெளியே வந்தார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
விஜயை 2-வது நாளாக இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டுள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, பொங்கலுக்கு பிறகு விசாரணையை தொடருமாறு விஜய் தரப்பில் கேட்கப்பட்டது. அதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மதித்து உள்ளனர்.
இந்நிலையில், சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை முடிந்து டெல்லியில் இருந்து சென்னைக்கு விஜய் புறப்பட்டார்.
ஜன. 19-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.