எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் நேர்காணல்
- கர்நாடக மாநில அ.தி. மு.க. செயலாளர் எஸ்.டி. குமார் விருப்ப மனு அளித்தார்.
- 2-வது நாளாக நேர்காணலில் பங்கேற்க அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.
சென்னை:
அ.தி.மு.க. சார்பில் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டு நேற்று 20 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. மீதமுள்ள 20 தொகுதிகளுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று 2-வது நாளாக நடந்தது.
கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேரடியாக சில கேள்விகளை கேட்டார்.
காலையில் பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், கடலூர், சிதம்பரம் (தனி), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளுக்கு நடத்தினார். பிற்பகல் 2 மணி முதல் சிவகங்கை, தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி (தனி), திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுக்கு நடத்தினார்.
ஜெயலலிதா இருந்தவரை கர்நாடகாவில் சட்டப்பேரவை, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. களம் கண்டு வந்தது. அவர் மறைவுக்கு பிறகு கர்நாடகாவில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை.
அதே நேரத்தில் பெங்களூர், கோலார் தங்கவயல், சிவமொக்கா, பத்ராவதி, மைசூரு, மண்டியா, கோலார் போன்ற பகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது.
இதைப் பயன்படுத்தி தற்போது கர்நாடக அ.தி.மு.க.வினர், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கு வலியுறுத்தி வந்தனர்.
கர்நாடக மாநில அ.தி. மு.க. செயலாளர் எஸ்.டி. குமார் விருப்ப மனு அளித்தார். பெங்களூரிவில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில் தமிழர்கள் பெருவாரியாக வாழ்ந்து வரும் மத்திய தொகுதியில் போட்டியிட அவர் விருப்ப மனு அளித்தார்.
நேர்காணலை தொடர்ந்து கர்நாடகாவில் அ.தி.மு.க. போட்டியிடுமா? என்பது குறித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிகிறது.
2-வது நாளாக நேர்காணலில் பங்கேற்க அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர். விருப்ப மனு கொடுத்தவர்கள் தவிர வேறு யாரையும் அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை.