தமிழ்நாடு செய்திகள்

காணும் பொங்கல் விழா கொண்டாட்டம் - சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள்

Published On 2026-01-17 14:44 IST   |   Update On 2026-01-17 14:44:00 IST
  • மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.
  • மெரினா கடற்கரை அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

சென்னை:

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டது.

இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மெரினா கடற்கரையில் இன்று காலையில் இருந்தே பொதுமக்கள் குடும்பத்தோடு திரண்டனர்.

இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்களிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதன் காரணமாக மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா பகுதிகளுமே களைகட்டி காணப்பட்டது.

இப்படி பொழுதுபோக்கு மையங்களில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டதால் எந்தவித அசம்பாவிதமும் நிகழாத வண்ணம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டாடுவதற்காக போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர்கள் அறிவுரையின் பேரில் 16 ஆயிரம் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் சுமார் 1,500 ஊர்க்காவல் படையினர் மூலம் காணும் பொங்கல் கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாடு அறைகள் அமைக்கப்பட்டும், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலுள்ள 7 சர்வீஸ் சாலைகளின் நுழைவு வாயில்களில் போலீஸ் உதவி மையங்கள் அமைக்கப்பட்டும். அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீட்புப்பணிக்காக மோட்டார் படகுகளில் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 போலீசார் கண்காணித்தனர்.

மெரினா கடற்கரையில் 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டு அறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால், கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். குதிரைப்படையினர் மற்றும் மணற்பரப்பில் செல்லக்கூடிய ரோந்து வாகனம் மூலம் போலீசாரால் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு திருட்டு மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.

பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டறை, 3 தற்காலிக போலீஸ் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்டநெரிசலில் காணாமல் போனால் அவர்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர போலீஸ் மூலம் தயாரிக்கப்பட்ட, கைகளில் கட்டப்படும் பேண்ட், அடையாள அட்டைகள், போலீஸ் உதவி மையங்கள் மற்றும் தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் வைக்கப்பட்டிருந்தது.

 

 

மெரினா கடற்கரைக்கு பெற்றோருடன் வந்த குழந்தைகளுக்கு இந்த அடையாள பேண்ட் கட்டி விடப்பட்டது.

மெரினா கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்புகளில் 4 டிரோன் கேமராக்கள் என மொத்தம் 8 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன.

மதுபோதையில் வாகனம் ஓட்டி வருபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை. துரைப்பாக்கம், மதுரவாயல் பைபாஸ் சாலை, ஜி.எஸ்.டி. ரோடு மற்றும் இதர சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது பைக் ரேசை தடுப்பதற்கும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் காலையிலேயே தங்களது குடும்பத்தோடு திரண்டு இருந்தனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் லயன் சபாரியை காண்பதற்காக நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட் எடுத்தனர். இதற்காக அவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க நேர்ந்தது.

பூங்காவை சுற்றி பார்ப்பதற்கான வாகனத்தை பதிவு செய்வதற்கும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கிண்டி சிறுவர் பூங்காவிலும் வரிசையில் நின்று பொதுமக்கள் டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தனர்.

 

கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் சிறுவர், சிறுமிகள் தங்களது பெற்றோர்களோடு இணைந்து காணும் பொங்கலை குதூகலத்தோடு கொண்டாடி மகிழ்ந்தனர்.

மெரினா கடற்கரை இப்போது அழகுபடுத்தப்பட்டு குழந்தைகள் விளையாடுவதற்காக விளையாட்டு உபகரணங்களும் அதிக அளவில் அமைக்கப்பட்டு உள்ளன.

அனைவரையும் கவரும் வகையில் இதய வடவிலான இருக்கைகள், பளிங்கு போன்று வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் இருக்கைகள் ஆகியவைகளும் கடற்கரை மணல் பரப்பில் புதிதாக இடம்பெற்றுள்ளன.

இந்த இருக்கைகளில் அமர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொண்டு புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, திருச்சி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் அலைமோதினார்கள். இதைத்தொடர்ந்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் உத்தரவின்பேரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

குறிப்பாக கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கி உயிரிழந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இப்படி இன்று காணும் பொங்கல் தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News