Jnanpith Award | கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
- இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
- 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு ஞானபீட விருது கிடைக்கிறது
இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது இந்தாண்டு கவிஞர் வைரமுத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1975ல் எழுத்தாளர் அகிலனுக்கும், 2002ல் ஜெயகாந்தனுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைக்கிறது.
ஞானபீட விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து வைரமுத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய அங்கீகாரமான ஞானபீட விருது, புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும். சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு படைப்பாளிக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் பெருமிதம் அளிக்கும் செய்தியாகும்.
1975-ல் எழுத்தாளர் அகிலன் மற்றும் 2002-ல் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு, ஞானபீட விருதைப் பெறும் மூன்றாவது தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையை கவிஞர் வைரமுத்து பெறுகிறார். 1972-ல் 'வைகறை மேகங்கள்' என்ற தனது முதல் கவிதை நூலின் மூலம் இலக்கியப் பயணத்தைத் தொடங்கிய அவர், கவிதைகள் மற்றும் நாவல்கள் என 40-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தமிழ் மொழியின் செழுமையை உலகறியச் செய்துள்ளார்.
சுமார் 7,500-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ள வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 7 முறை வென்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் என்ற தனிச்சிறப்பையும் பெற்றுள்ளார். சமூகம், இயற்கை மற்றும் மனித உணர்வுகளின் ஆழத்தைக் கவிதைகளாலும் பாடல்களாலும் செதுக்கிய இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.
ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வையும், அவர்களின் வலிகளையும் நுட்பமான சொல்லாற்றலால் பதிவு செய்த கவிஞர் வைரமுத்துவின் இலக்கியப் பங்களிப்பு இந்த விருதால் மேலும் சிறப்பு பெறுகிறது. தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் கிடைத்துள்ள இந்த உயரிய அங்கீகாரம் மகிழ்ச்சியளிக்கிறது. இனிவரும் காலங்களிலும் தனது சிறந்த படைப்புகளால் தமிழ் மொழியைத் தொடர்ந்து வளப்படுத்திட இந்த விருது அவருக்கு ஊக்கமளிக்கட்டும்.
கவிஞர் வைரமுத்துவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பெ. சண்முகம் அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.