உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் 21-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2023-06-16 07:33 GMT   |   Update On 2023-06-16 07:33 GMT
  • பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
  • அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 21-ந்தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை சிறிதும் கண்டுகொள்ளாமல், தன் குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

மு.க.ஸ்டாலின் குடும்பம் வளம்பெற வேண்டும் என்பதற்காக, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பதவியில் இருந்த செந்தில் பாலாஜி பல்வேறு வகைகளில் ஊழல் முறைகேடுகள் செய்துள்ளதை மக்கள் அனைவரும் கண்கூடாகப் பார்க்கின்றனர்.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் பெற்றுக்கொண்டு அப்பாவி இளைஞர்களை ஏமாற்றிய வழக்கில் அமலாக்கத்துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவரது செயலால் தமிழ்நாட்டிற்கு மிகுந்த அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.

பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று, நேற்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கழகத்தின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

தி.மு.க. அரசைக் கண்டித்தும்; லஞ்ச வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில், வருகின்ற 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும்; கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News